Saturday, May 4, 2013

சுய மதிப்பீடு அவசியம்


நகை, வாகனம், வீடு இப்படி எதை வாங்குவதென்றாலும் அடுத்தவர்களின் ஆலோசனையை பெற நாம் தவறுவதில்லை. விதிவிலக்காக சிலர், ஆலோசனையை கேட்பதுடன் நிறுத்திக்கொண்டு, தாம் நினைத்ததை மட்டுமே செய்வார்கள். இது சரியா? தவறா? இதைப்பற்றிய விவாதம் இப்போது தேவையில்லை.பொருட்களுக்கே இப்படி என்றால் தனி நபரின் மதிப்பை நிர்ணயிப்பது யார்? பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த விலையை தாங்களே நிர்ணயித்துக்கொள்வதுண்டு. அவர்கள் மிகச்சரியாக தங்களை குறைத்தே மதிப்பிட்டுக்கொள்வார்கள். இந்த இடத்தில்தான் தன்னம்பிக்கை தொலைந்துவிடுகிறது. இதற்கு பிறருடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்வதே அவர்கள் செய்யும் அடிப்படைத் தவறு. மற்றவர்களை பார்த்து, அவர்களது ஆடை, அணிகலன்களை பார்த்து நீங்கள் ஏன் பிரமிக்க வேண்டும். மற்றவர்கள் பிரமிக்கும்படி நீங்கள் வளர வேண்டாமா? முதலில் புறம் பேசுவதைத் தவிர்த்து, மோசமான விஷயங்கள் உங்கள் காதுகளை எட்டாத வகையில் இருங்கள். இதற்கு சாக்ரடீஸ் மற்றும் ரமணரின் கூற்றை சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். உங்களை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார் சாக்ரடீஸ், நான் யார் என்பதை உணருங்கள் என்கிறார் மகான் ரமணர். உங்களது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை பட்டியல் இடுங்கள். பலவீனத்தை பலமாக்கும் வழியை தேடுங்கள். சூழ்நிலையை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுங்கள். முடிவெடுப்பதில் அவரசம் வேண்டாம். சரியான முடிவெடுத்தால் உங்களுக்கு நீங்கள் வழங்கிக்கொள்ளும் மதிப்பெண் கண்டிப்பாக நூறாகத்தான் இருக்கும். அப்புறமென்ன வாழ்க்கை இனிமைதான்.